உள்ளூர் செய்திகள்

ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2023-08-13 11:55 IST   |   Update On 2023-08-13 11:55:00 IST
  • ஜெயங்கொண்டம் அருகே நள்ளிரவு ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
  • பக்கத்து வீட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகர் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (வயது 40) ராணுவ வீரரான இவர் உத்தரகாண்டில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ரேணுகா(37) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.இவர்கள் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் வசித்து வருகின்றனர். நேற்று காலை ரேணுகா வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் தான் பிறந்த ஊரான தேவ மங்கலம் கிராம கோவில் விசேஷத்துக்கு சென்றார். ராணுவ வீரரின் வீட்டு அருகாமையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வேல்முருகன் குடும்பத்தினரும் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நள்ளிரவு ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ட்ரங்க் பெட்டியில் வைத்திருந்தஇரண்டரை பவுன் நகை, ரூ.3000 ரொக்க பணம், வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை திருடி சென்றனர். பின்னர் வேல்முருகன் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ. 300 பணம் மற்றும் வெள்ளி கொலுசுகளை திருடிக் கொண்டு தப்பி சென்றனர். பக்கத்து வீட்டார் ராணுவ வீரரின் வீடு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு ரேணுகாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஊர் திரும்பினார். பின்னர் ரேணுகா மற்றும் வேல்முருகன் ஆகியோர் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ராணுவ வீரர் உட்பட அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News