கூட்ட அரங்கத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க கோரிக்கை
- ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்ட மன்றத்திற்கு கலைஞர் பெயர் வைக்க கோரிக்கை
- ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல்
ஜெயங்கொண்டம், ஜூன்.20-
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம், எம்.ஜி.ஆர். கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ரவிஷங்கர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் , துணைத் தலைவர் லதா கண்ணன் முன்னிலை வகித்து பேசினார்.கூட்டத்தில் மன்ற பொருட்களை இளநிலை உதவியாளர் மாலதி வாசித்தார். மேலும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை முன்வைத்து பேசினார்கள் அதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பணிகள் செய்வதற்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் மற்றும் இதுவரை சிறப்பு நிதி ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒதுக்கப்படவில்லை அதை உடனடியாக வழங்க வேண்டும்,ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கீழ்பகுதியில் எம்ஜிஆர் கூட்ட அரங்கம் என பெயர் வைத்தது போல் மேல்பகுதியில் உள்ள கூட்ட அரங்கிற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் கூட்டரங்கம் என பெயர் சூட்ட வேண்டும் என திமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்கும் வகையில் ஒன்றிய தலைவர் ரவிசங்கர் ஒன்றிய குழு உறுப்பினர்களிடம் அனுமதி பெற்று நிறைவேற்றி வைப்பதாக அறிவித்தார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாமோதரன் நன்றி கூறினார்.