மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- இடைத்தரகர்கள் இன்றி மணல் அள்ள வலியுறுத்தி நடந்தது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வெள்ளாற்றில் இடைத்தரகர் இன்றி மணல் குவாரி தொடங்கக் கோரி, மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை வட்டத்துக்கு உட்பட்ட சேந்தமங்கலம், சன்னாசி நல்லூர், சிலுப்பனூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வெள்ளாற்றில் மீண்டும் மணல் குவாரி தொடங்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்களின் பல்வேறு போரட்டங்களையடுத்து, வரும் 21 ஆம் தேதி முதல் குவாரி இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் குவாரியில் இருந்து பொக்லைன் மூலம் அள்ளப்பட்ட மணல் இருப்பு வைக்கப்பட்டு மாட்டு வண்டிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இடைத்தரகர் இன்றி தொழிலாளர்களே ஆற்றில் இறங்கி மணல் அள்ளிக் கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாய பாதுகாப்பு சங்க அமைப்பாளர் பாலசிங்கம், மாட்டு வண்டி உரிமையாளர் நல சங்கத் தலைவர் மோகன் ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்கள் மாட்டு வண்டிகளுடன் ஆற்றில் இறங்கி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை மற்றும் கனிமவளத் துறையினர், கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து அனுமதி பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தயைடுத்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்