உள்ளூர் செய்திகள்

அகழ்வாராய்ச்சியில் சோழர் கால அரண்மனையின் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு

Published On 2022-06-06 15:23 IST   |   Update On 2022-06-06 15:23:00 IST
  • அகழ்வாராய்ச்சியில் சோழர் கால அரண்மனையின் செங்கல் சுவரின் தொடர்ச்சி பாகம் கண்டறியப்பட்டுள்ளது.
  • 7 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


அரியலூர்:

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சோழர் கால அரண்மனையின் செங்கல் சுவரின் தொடர்ச்சி பாகம் கண்டறியப்பட்டது.

தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேடு உட்பட 7 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாளிகை மேடு அகழ்வாய்வில் தொழிலாளர்கள், அலுவலர்கள், பயிற்சி மாணவர்கள் என 40 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்று வரும் அகழ்வாய்வில் ஏற்கனவே பானை ஓடுகள், கூரை ஓடுகள், ஆணி வகைகள், செப்புக்காசு, கெண்டி மூக்கு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் அரண்மனையின் மேல்பகுதி சுவரின் 2 அடுக்குகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனை சுவரின் தொடர்ச்சி பாகம் கண்டறியப்பட்டுள்ளது. இவை சுமார் 22 அடுக்குகள் கொண்ட செங்கல் சுவராகும். அதே போல சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீங்கானின் உடைந்த அடிப்பாகமும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாயில் மேலும் அரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறை அலுவலர்கள் கருதுகின்றனர்.


Tags:    

Similar News