உள்ளூர் செய்திகள்

பி.சி., எம்.பி.சி., இனத்தவர்கள் பொருளாதார மேம்பாட்டு கடன் பெற அழைப்பு

Published On 2022-06-17 13:45 IST   |   Update On 2022-06-17 13:45:00 IST
  • பி.சி., எம்.பி.சி., இனத்தவர்கள் பொருளாதார மேம்பாட்டு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
  • மேலும் விவரங்களுக்கு ஆட்சியரகத்தில் உள்ள அலுவலகத்தை அணுகலாம்

அரியலூர் :

அரியலூர் மாவட்டத்தில் டாப்செட்கோ, டாம்கோ சார்பில் நடைபெறும் லோன் மேளாவில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற் கடன் வழங்கும் திட்டம் செயல்படத்தப்பட்டு வருகிறது.

தொழிற்கடன், தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறுகடன் மற்றும் கறவை மாடு வாங்க கடனுதவி பெற விரும்புவர்கள் மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான கல்வி கடன் பெற விரும்புவர்கள் அடுத்த மாதம் 6-ந் தேதி அன்று திருமானூர்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 13 -ந் தேதி அன்று செந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 20-ந் தேதி அன்று உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 27-ந் தேதி அன்று தென்னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் நடைபெறவுள்ள லோன்மேளாவில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News