புதுச்சேரி

ஆரோவில் மாத்ரி மந்திரில் தீபம் ஏற்றி கூட்டு தியான நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

அரவிந்தர் 150-வது பிறந்தநாள்: ஆரோவில்லில் கூட்டு தியானம்

Published On 2022-08-15 04:58 GMT   |   Update On 2022-08-15 05:55 GMT
  • அரவிந்தரின் 150-வது பிறந்த நாளையொட்டி அரவிந்தர் ஆசிரமம் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
  • உலக மக்கள் வேறுபாடுகளை மறந்து ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் என்பது அரவிந்தரின் கனவு.

புதுச்சேரி:

1872-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர் அரபிந்த கோஷ்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக சிறையில் அடைக்கப்பட்டு, விடுதலைக்கு பின்னர் புதுவைக்கு வந்து ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

அவரின் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஆசிரமம் அமைத்து மகான் ஸ்ரீ அரவிந்தர் என அழைத்தனர். அரவிந்தர் 1950-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி 78 வயதில் மறைந்தார். அவரது உடலை ஆசிரமத்திலேயே சமாதி வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் 6 நாட்கள் புதுவை நகரின் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், அரவிந்தர் பயன்படுத்திய அறை பக்தர்களின் தரிசனம் செய்ய திறக்கப்படும்.

இன்று அரவிந்தரின் 150-வது பிறந்த நாளையொட்டி அரவிந்தர் ஆசிரமம் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 6 மணிக்கு தியான நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அரவிந்தர் பயன்படுத்திய அறையை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

உலக மக்கள் வேறுபாடுகளை மறந்து ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் என்பது அரவிந்தரின் கனவு. அதனை ஆரோவில்லில் சர்வதேச நகரை உருவாக்கி செயல்படுத்தியவர் அரவிந்தரின் முக்கிய சீடரான அன்னை மீரா.

அரவிந்தரின் பிறந்த நாளை யொட்டி ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள மாத்ரி மந்திரில் கூட்டு தியானமும், ஆம்பி தியேட்டரில் அதிகாலை 4.30 மணியிலிருந்து 6. 30 மணி வரை போன் பயர் எனப்படும் தீபமேற்றி கூட்டு தியானம் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகள், ஆரோவில்வாசிகளும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News