உள்ளூர் செய்திகள்

கோவை மாநகராட்சி 88-வது வார்டில் பராமரிப்பின்றி கிடக்கும் பூங்கா

Published On 2022-11-14 14:54 IST   |   Update On 2022-11-14 14:54:00 IST
  • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல பராமரிப்புடன் இயங்கி வந்தது.
  • பூங்கா பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது

குனியமுத்தூர்,

கோவை மாநகராட்சி 88-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் அரசு பணியாளர் காலனியில் மாநகராட்சி பூங்கா செயல்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல பராமரிப்புடன் இயங்கி வந்தது. ஆனால் தற்போது 1½ வருடமாக எவ்வித பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.

தற்போது மழை காலம் என்பதால் பூங்காவில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பூங்காவுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி 88-வது வார்டில் 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஆட்சியின் போது இந்த பூங்கா உருவாக்கப்பட்டது. அந்த சமயத்தில் பூங்கா பராமரிப்புக்காக 2 பேர் வேலைக்கு அமர்த்தபட்டனர். இரவு நேர காவலாளி ஒருவரும் நியமிக்கப்பட்டார்.

ஆனால் தற்போது அவர்கள் அனைவருமே வேலையில் இருந்து நிறுத்தப்பட்டு விட்டனர். இதனால் பூங்கா பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.

இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் மது அருந்திவிட்டு ரகளை செய்கின்றனர். மேலும் அப்போதைய காலத்தில் பூங்காவை சுற்றிலும் மதில் சுவர் என்ற பெயரில் கிரில் கேட் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அதனையும் உடைத்து விட்டனர்.

இந்த பகுதியில் மக்களின் நேர போக்காக இருக்கும் ஒரே இடம் இந்த பூங்கா மட்டும்தான். ஆனால் அதுவும் பயனில்லாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது. ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பூங்காவுக்கு வந்து ஏமாந்து திரும்பி செல்லும் சூழ்நிலை காணப்படுகிறது.

கோவை மாநகராட்சி இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பயன்பாடு இல்லாத பூங்காவை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News