விக்கிரவாண்டி அருகே பா.ம.க.வினர் திடீர் சாலை மறியல்
- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விக்கிரவாண்டியில் வீடு வாடகை எடுத்து ஓட்டு சேகரித்து வருகிறார்.
- சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் பா.ம.கவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவாவும், பா.ம.க. சார்பில் சி. அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயாவும் போட்டியிடுகின்றனர்.
தி.மு.க வேட்பாளரை ஆதரித்து ஒட்டு மொத்த தமிழக அமைச்சர்கள், தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். அது போல் பா.ம.க வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கிராமம் கிராமாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விக்கிரவாண்டியில் வீடு வாடகை எடுத்து ஓட்டு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கடையம், கருவாட்சி, அத்தியூர் திருக்கை, கெடார் உள்ளிட்ட 7 ஊராட்சிகளில் பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். கடையம் ஊராட்சியில் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது இந்த பிரசாரத்தில் பெண்கள் கலந்து கொள்ளாமல் இருக்க தி.மு.க.,வினர் பணம் கொடுத்து அடைத்து வைத்துள்ளதாக பா.ம.க.,வினர் குற்றம் சாட்டினர்.
இதற்கு போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இதனை கண்டித்து பா.ம.க.,வினர் கடையம் மைதானம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம். எல்.ஏ., அருள் மற்றும் ஏராளமான பா.ம.க.வினர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது பெண்களை போகவிடாமல் தடுக்கும் விதமாக பணம் கொடுத்து அவர்களை அழைத்துச் சென்றுவிட்டதாகவும், இதற்கு துணை போகும் போலீசாரை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால் அங்கு திடீர் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் பா.ம.கவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.