உள்ளூர் செய்திகள்

கடலூர் பகுதிகளில் துணிகரம்: வங்கி பெண் அதிகாரி உள்பட 2 பேரிடம் நகை பறித்த கொள்ளையர்

Published On 2022-11-10 13:30 IST   |   Update On 2022-11-10 13:30:00 IST
  • பெண் அதிகாரி தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி 2 பேருக்கு வழி விட்டார்.
  • பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்:

கடலூர் சாவடியை சேர்ந்த மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வந்த பெண் அதிகாரி நேற்று இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது பெண் அதிகாரியை 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பெண் அதிகாரி தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி 2 பேருக்கு வழி விட்டார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த 2 பேர் சிறிது தூரம் சென்று திடீரென்று நின்றனர். பின்னர் பெண் அதிகாரியிடம் ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வழி மாறி வந்து விட்டோம் என பேச்சை தொடர்ந்து திடீரென்று கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சரடை அறுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்து சென்றனர். அதிர்ச்சி அடைந்த பெண் அதிகாரி "திருடன் திருடன்" என கூச்ச லிட்டார். இருந்தபோதிலும் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தேக த்தின் பேரில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு நபரை போலீசார் பிடித்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் நெல்லிக்கு ப்பம் மேல்பட்டாம்பாக்கம் சேர்ந்த ரஞ்சினி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இதே போல் 2 மர்ம வாலிபர்கள் பொருள் வாங்குவது போல் கடைக்குள் நுழைந்து ரஞ்சனி வாயை கையால் அழுத்தி, கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சரடு பறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்து சென்றனர். இது குறித்து நெல்லி க்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வங்கி பெண் அதிகாரி மற்றும் மளிகை கடை நடத்தி வந்த பெண்களிடம் 10 பவுன் தாலி சரடு திருடி சென்றது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஏராளமான நபர்களை வழிமறித்து செல்போன் திருட்டு நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணைக்கு பிறகு சுமார் 5 நபர்களை செல்போன் திருடி சென்றதாக கண்டறிந்து கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது செயின் பறிப்பு கும்பல் தங்களின் கைவரிசை காட்டி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News