உள்ளூர் செய்திகள்

வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்கக்கூடாதுஓசூர் மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை

Published On 2023-04-14 15:14 IST   |   Update On 2023-04-14 15:14:00 IST
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்ற்றும் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக விளைநிலங்களில் மின்வேலிகள் அமைக்க கூடாது என்று விவசாயிகள், பொது மக்களுக்கு மின்வாரியத்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
  • கடந்த சில நாட்களாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வனப்பகுதிகளில் வழியாக ஊருக்குள் நுழையும் யானைகள் உள்பட வனவிலங்குகள் மின்வேலியில் சிக்கி உயிரிழந்து வருகிறது. இதனை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தனர்.

ஓசூர்,

ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஒகனேக்கல் வனப்பகுதி மற்றும் தேன்கனிக்கோடை, சூளகிரி வனப் பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் கோடைகாலம் என்பதனால் தங்களின் விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் மற்றும் வனவிலங்குகள் நுழையாமல் இருக்க விவசாயிகள் சிலர் மின்வேலி அமைக்கின்றனர். அவ்வாறு சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்வேலியின் காரணமாக வன விலங்குகள் பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மேலும், அதில் மனித உயிர்களும் பலியாகின்றன.

இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் வனச்சரக அலுவலர்கள் அடங்கிய ஆய்வுக்குழுவுடன் இணைந்து, வனவிலங்குகள் கோடைகாலத்தில் நீர்நிலையைத்தேடிச் செல்லும் வழித்தடங்களான பெட்டமுகிலாளம், அட்ட குறுக்கி, கும்பளம், ஜவளகிரி, தளி, பீர்ஜேபள்ளி, நாயக்கனபள்ளி, உத்தனபள்ளி, பேளாளம், பாளையம், சந்தனக்கல், யு.புரம், காரண்டபள்ளி, ஜார்கலட்டி, திப்பசந்திரம், பச்சப்பனட்டி, அல்சட்டி, குந்துகோட்டை, உப்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதி யானைகள் செல்லும் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு தாழ்வாக உள்ள உயர் மின்அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளை ஆய்வின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு, கடந்த மாதம் 30-ந்தேதி முதல், தாழ்வாக உள்ள மின்பாதைகளை சரிசெய்தல், புதிய கம்பம் நடுதல், சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்தல், மின்பாதைகள் அருகில் உள்ள மரக்கிளைகளை அக்கல் கம்பங்களின் உயரத்தை அதிகப்படுத்துதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், மின் கம்பங்களை சுற்றி முள்வேலி அமைத்தல் போன்ற 140 பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகள், மின்சார வேலி அமைப்பது இந்திய மின்சார சட்டம் 2003 பிரிவு (138)-ன்படி குற்றமாகும். மேலும் குற்றவியல் தண்டனையும் வழங்கப்படும்.

எனவே, மேற்கண்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விவசாய நிலங்களில் மின் வேலிகள் அமைக்கக்கூடாது என்ற துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. யாரேனும், மின்வேலி அமைத்திருப்பது தெரிய வந்தால், மின் வாரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு, பொதுமக்கள் புகார் அளிக்கலாம்". இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News