உள்ளூர் செய்திகள்

நாகை அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும்; முதல்-அமைச்சரிடம் மனு

Published On 2023-08-28 09:21 GMT   |   Update On 2023-08-28 09:21 GMT
  • திட்டச்சேரி பேரூராட்சியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
  • திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.

நாகப்பட்டினம்:

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக நாகப்பட்டினம் வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகமது ஷா நவாஸ் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவை அளித்தார்.

அதில் கூறியிப்பதாவது:-

155 ஆண்டுகள் பழமையான நாகப்பட்டினம் நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும். நாகப்பட்டினம் நகராட்சியில், பாரம்பரிய நகர்மன்ற கட்டடம் பாழடைந்து உள்ளது. தொன்மையான அந்தக் கட்டடத்தை பாதுகாக்கும் வகையில் புனரமைக்க வேண்டும்.

நாகப்பட்டினம் நகராட்சி பாரதி மார்க்கெட் மிகவும் பழுதடைந்துள்ளது.

அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும். நாகூர் பேருந்து நிலையம் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.

நாகப்பட்டினம் புதிய கடற்கரை மற்றும் நாகூர் சில்லடி கடற்கரையில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

நாகையில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும். நாகையில் தமிழறிஞர் மறைமலை அடிகள் நினைவாக, கலையரங்கம் கட்ட வேண்டும்.

நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் அவசர சிகிச்சைப் பிரிவை, நாகை மக்களின் நலன்கருதி தொடர்ந்து அங்கேயே இயங்கச் செய்ய வேண்டும்.

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது.

இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.

நாகப்பட்டினம் சூடாமணி விகாரம் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களை காட்சிப்படுத்தும் வகையில், கீழடி போல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

திட்டச்சேரி பேரூராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலை உள்ளது.

எனவே, அங்கு சிறப்பு கவனம் செலுத்தி, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி வட்டமாக (தாலுகா) அறிவிக்க வேண்டும்.

திருச்செங்காட்டங்குடி அருள்மிகு உத்திராபதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.

ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News