உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த மாடு 5 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

Published On 2022-10-19 12:18 IST   |   Update On 2022-10-19 12:18:00 IST
  • ஒரு வீட்டின் பின்புறம் இருந்த 15 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டிக்குள் ஒரு மாடு தவறி விழுந்தது.
  • துர்நாற்றம் வீசிய கழிவுநீர் தொட்டியில் இறங்கி கறவை மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

பொன்னேரி:

பொன்னேரி என். ஜி. ஓ. நகர், அவ்வை தெருவில் 2 மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன.

அப்போது ஒரு வீட்டின் பின்புறம் இருந்த 15 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டிக்குள் ஒரு மாடு தவறி விழுந்தது.

அதனால் வெளியேற முடியாமல் தவித்தது. இதனை கண்டு உடன் வந்த மற்றொரு மாடு தொடர்ந்து கத்தியபடி அதே பகுதியில் சுற்றி, சுற்றி வந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொன்னேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் இறங்கி வெளியேற முடியாமல் தவித்த மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதில் இருந்த கழிவு நீர் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் தேங்கி கிடந்ததால் பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக தீயணைப்பு வீரர்கள் சில நிமிடங்களுக்கு மேல் கழிவு நீர் தொட்டியில் நிற்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து சுமார் 5மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் கயிறு கட்டி மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டனர். துர்நாற்றம் வீசிய கழிவுநீர் தொட்டியில் இறங்கி கறவை மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Similar News