உடைந்த சாலையை கடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களை படத்தில் காணலாம்.
உடைந்த சாலையை 2 மாதமாகியும் சீரமைக்கவில்லை- பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தவிப்பு
- பக்கவாட்டு சுவர்கள் மண் அரிப்பு ஏற்பட்டு தொப்பூர்-பொம்மிடி சாலையின் ஒரு பகுதி உடைந்து சரிந்து தண்ணீரில் மூழ்கியது.
- மாற்று சாலைக்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யாமல் பிரதான சாலையும் அணையின் தண்ணீர் வற்றிய பிறகும் சாலை சீரமைக்கப்படவில்லை.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணை 50 அடி உயரம் கொண்டது. தொப்பூரிலிருந்து பொம்மிடி பகுதிக்கு தொப்பையாறு அணையை ஒட்டி தார்சாலை செல்கிறது.
இந்த சாலையில் பேருந்துகள் கனரக வாகனங்கள் பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தினமும் அதிக அளவில் பயணிக்கும் அளவிற்கு பிரதான சாலையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தொப்பையாறு அணைக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து இருந்ததாலும் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதாலும் அணையின் தண்ணீர் சாலையின் இருபுறமும் தேங்கி நின்றது.
இதனால் அணையை ஒட்டி உள்ள சாலையின் பக்கவாட்டு சுவர்கள் மண் அரிப்பு ஏற்பட்டு தொப்பூர்-பொம்மிடி சாலையின் ஒரு பகுதி உடைந்து சரிந்து தண்ணீரில் மூழ்கியது.
சாலையின் மற்ற பகுதிகள் எந்த நேரத்திலும் தண்ணீரும் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதால் பேருந்து போக்குவரத்து கனரக வாகனங்களின் போக்குவரத்து என அனைத்தும் முழுமையாக தடை செய்யப்பட்டது.
மேலும் இப்பகுதியில் பிரதான முக்கியமான சாலையாக இச்சாலை இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மறுபக்கத்தில் உள்ள பேருந்துக்கு தினமும் மாறி மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமத்துக் குள்ளாகியுள்ளனர். மாற்று சாலைக்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யாமல் பிரதான சாலையும் அணையின் தண்ணீர் வற்றிய பிறகும் சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பள்ளி கல்லூரி மாணவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.