உள்ளூர் செய்திகள்

தெங்குமரஹாடாவில் மாயார் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும்

Published On 2022-07-18 15:48 IST   |   Update On 2022-07-18 15:48:00 IST
  • மக்கள் பிரதான தொழிலாக விவசாய தொழில் மேற்கொண்டு வருகின்றனர்.
  • தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டி தர வேண்டும் என அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரவேணு:

நீலகிரி மாவட்டத்தின் மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது தெங்குமரஹடா மற்றும் அல்லிமாயார் கிராமங்கள். இந்த கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

இங்குள்ள மக்கள் பிரதான தொழிலாக விவசாய தொழில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கிராமங்களுக்கு மேட்டுப்பாளையம்- சத்தியமங்கலம் சாலை வழியாக சென்று மாயார் ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பகுதிக்கு என்று ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டம் பகுதிக்கு தான் வர வேண்டும்.

தற்போது மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தெங்குமரஹடா பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், வேலை மற்றும் மருத்துவம் போன்ற தேவைகளுக்கு பவானிசாகர் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் யாரும் பரிசல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் ஒரு சிலர் அத்தியவாசிய பொருட்கள் வாங்குவதற்காக பரிசல்களில் பயணம் செய்து பவானி சாகர், கோத்தகிரி போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

அப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோத்தகிரிக்கு பரிசலில் சென்ற 3 பேர் ஆற்று வெள்ளத்தில் பரிசலுடன் சிறிது தூரம் அடித்து செல்லப்பட்டனர். இருப்பினும் பரிசல் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு அவர்களை காப்பாற்றினார்.

சாதாரண நாட்களில் இந்த பகுதி மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்கு பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் மழை போன்ற காலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட ஆபத்தான பயணத்தையே மேற்கொள்ள வேண்டிய சூழல் அந்த பகுதி மக்களுக்கு உள்ளது.

எனவே தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டி தர வேண்டும் என அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News