உள்ளூர் செய்திகள்

700 ஆண்டுகளுக்கு முந்தைய பார்வதி சிலை: பேரிகை சிவன் கோவிலில் அருங்காட்சியக அதிகாரி ஆய்வு

Published On 2022-09-14 15:30 IST   |   Update On 2022-09-14 15:30:00 IST
  • முன் வலது கை அபய ஹஸ்தத்தையும், இடது கை வரத முத்திரையிலும் உள்ளன.
  • இக்கருங்கல் சிற்பம் பார்ப்பதற்கு ஒரு தேரில் உள்ள மரச் சிற்பம் போன்று நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

ஓசூர்,

ஓசூர் அருகே பேரிகையில் உள்ள சிவன் கோயிலில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய பார்வதி சிலை உள்ளது.

இந்த சிலை குறித்து, ஆய்வு செய்த கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓசூர் அருகே உள்ள பேரிகையில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பார்வதியின் சிலை 700 வருடங்களுக்கு முந்தையது. கருப்பு நிறத்திலான கருங்கல்லால் 4.5 அடி உயரம் கொண்டதாக செய்யப்பட்டுள்ளது.

13- ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலின் எந்தப் பகுதியும் சேதப்படுத்தப்படவில்லை. பார்வதி சன்னதி மட்டும் மரம் வளர்ந்து இடிந்ததால், இடைக்காலத்தில் சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த காலத்தில் செய்யப்பட்ட அதே சிலை இன்னும் அப்படியே பாதுகாப்பாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே இன்னும் வழிபாட்டில் உள்ள பழமையான லிங்கமும், பார்வதி சிலையும் இங்கு தான் உள்ளது. கோவிலின் 700 ஆண்டுகளுக்கு முந்தைய பெயர், திருவத்தீஸ்வரமுடைய நாயனார் என்பதாகும். பார்வதி சிலைக்கு பின் உள்ள பிரபாவளி என்ற பகுதியும் அதே கருங்கல்லால் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. நான்கு கைகள் காணப்படுகின்றன.

முன் வலது கை அபய ஹஸ்தத்தையும், இடது கை வரத முத்திரையிலும் உள்ளன. பின் கைகளின் பாச அங்குசங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இக்கருங்கல் சிற்பம் பார்ப்பதற்கு ஒரு தேரில் உள்ள மரச் சிற்பம் போன்று நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், வரலாற்று ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News