ரெயில் மோதி 6 எருமை மாடுகள் பலி: சக்கரத்தில் சிக்கியதால் நடுவழியில் நிறுத்தம்
- எருமை மாடுகள் ஒரே நேரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றன.
- ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
ஜோலார்பேட்டை:
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி புறப்பட்டது.
ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 2.28 மணியளவில் வந்தது. பயணிகள் இறங்கிய பின்பு மீண்டும் சிறிது நேரத்தில் ஈரோடு நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றது.
திருப்பத்தூர்-மவுகாரம்பட்டி ரெயில் நிலையத்திற்கு இடையே சு.பள்ளிப்பட்டு என்ற இடத்தில் 6 எருமை மாடுகள் ஒரே நேரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றன.
அப்போது ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் எருமை மாடுகள் மீது மோதியது. இதில் எருமை மாடுகள் அடிபட்டு இறந்தன. எருமை மாடுகள் உடல் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட தால் உடனடியாக நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்த திருப்பத்தூர் ரெயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயிலில் சிக்கிய 6 எருமை மாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக 4.55 மணியளவில் ஈரோடு நோக்கி புறப்பட்டு சென்றது.
இதன் காரணமாக ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், ஆலப்புழை வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கேரள மாநிலம் செல்லும் திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டன.
அதன்பிறகு ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.