உள்ளூர் செய்திகள்

கோவையில் ஒரேநாளில் 44 பேர் கைது: நடவடிக்கைக்கு பயந்து ரவுடிகள் வெளியூர் ஓட்டம்

Published On 2025-03-24 12:14 IST   |   Update On 2025-03-24 12:14:00 IST
  • குற்றவாளிகளை தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு.
  • குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் நடவடிக்கை.

கோவை:

தமிழகத்தில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்களது பகுதிகளில் குற்றச் செயல்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் போது தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்திலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், வெளி மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

இவ்வாறு பணிக்காக வருபவர்களுடன் அண்டை மாவட்டங்கள், மாநிலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் கலந்து விடுகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட கடலூர் திட்டக்குடியை சேர்ந்த தனிப்படை போலீசார், சிறுமிகளை கடத்தில் விபசாரத்தில் ஈடுபடுத்திய நபரை கைது செய்தனர்.

இதனால் வெளி மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கோவையில் பதுங்கிய நபர்கள் குறித்து சோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

குற்ற சம்பவங்களை தடுக்க அனைத்து கோட்டங்களிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் 80 தாபாக்காள், ஓட்டல்களில் போலீசார் சோதனை செய்தது, 350 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்களின் இருப்பிடம், அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்தும் விசாரித்தனர். இதில் 14 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரவுடிகள் குறித்து சோதனை நடத்தினர். இதில் 70-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் 32 பேர் மீது ஆயுத வழக்கு, கஞ்சா, கொள்ளை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 32 பேரை ஜெயிலில் அடைத்தனர். 12 பேர் நன்னடத்தை பிணைய சான்றிதழின் கீழ் விடுவித்தனர்.

இதேபோல் காந்திபுரம் பஸ் நிலையம், டவுன் பஸ் நிலையம், அரசு விரைவு பஸ் நிலையங்களிலும் போலீசார், போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தி ஆய்வு செய்தனர்.

ஏற்கனவே கோவை மாநகரில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஓராண்டுக்கு கோவையை விட்டு வெளியேற வேண்டும் என போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரிலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பலர் வெளியேறி உள்ளனர். அவ்வாறு வெளியேறாதவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இப்படி கோவை மாவட்டம் முழுவதும் ரவுடிகளுக்கு எதிராக போலீசார் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகள் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன் இங்கிருந்தால் நம் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என பயந்து கோவையில் உள்ள பல ரவுடிகள் ஊரை காலி செய்து, விட்டு வெளியூர்களுக்கு தப்பியோடி வருகின்றனர்.

கோவையில் நடந்து வரும் சோதனை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறியதாவது:-

பல மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், கோவையில் வந்து பதுங்கி கொள்கிறார்கள்.

அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவே இந்த சோதனை நடத்தப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். முக்கிய பகுதிகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News