உள்ளூர் செய்திகள்

தேவாலாவில் மான் வேட்டையாடிய 4 பேர் கைது

Published On 2022-07-03 09:15 GMT   |   Update On 2022-07-03 09:15 GMT
  • கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கி குண்டுகள்- மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • தேவாலா உட்கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில், காட்டு யானை, மான், கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் தேவாலா உட்கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில், காட்டு யானை, மான், கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த வனப்பகுதிகளில் காட்டு விலங்குகள் மர்மநபர்களால் வேட்டையாடப்படுவதாக உள்ளூர் மக்கள் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இதனை கண்காணிக்க சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் திருகேஸ்வரன், பிரதீப்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று சிலர் வனப்பகுதிக்கு வேட்டையாட செல்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார், தேவாலா பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த 4 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் 2 பைகளில் துப்பாக்கி குண்டுகள் மற்றும் மான்கறி வைத்திருந்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தனர். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், நாடுகாணியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(38), பெரிய சூண்டியை சேர்ந்த மைக்கேல்(30), புஷ்பராஜ்(33), அருண்(26) என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் மானை வேட்டையாடி, இறைச்சியை எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மான்கறி மற்றும் துப்பாக்கி குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News