உள்ளூர் செய்திகள்

சென்னையில் வீடு இல்லாதவர்கள் தங்குவதற்கு 35 நவீன தங்குமிடம்- 6 மாதங்களில் கட்டப்படுகிறது

Published On 2023-04-24 09:12 GMT   |   Update On 2023-04-24 12:23 GMT
  • மண்டலங்களில் தங்குமிடங்கள் கட்ட 11 இடங்கள் கண்டறியப்பட உள்ளது.
  • தங்குமிடங்களில் அவர்களுக்கு இலவச சேவைகள் அறிவிக்கப்படும்.

சென்னை:

சென்னையில் வீடு இல்லாமல் தெருவோரம் தங்கி இருப்பவர்களுக்கு 35 நவீன தங்குமிடங்களை கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.

தங்குமிடங்கள் கட்டுவதற்கான இடங்களை அடையாளம் காணுமாறு அதிகாரிகளிடம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக் கொண்டார்.

திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் தங்குமிடங்கள் கட்ட 11 இடங்கள் கண்டறியப்பட உள்ளது. மேலும் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார் பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் வீடற்றவர்களுக்கு 24 தங்குமிடங்கள் கட்டுவதற்கான மதிப்பீடுகள் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் புதிய தங்குமிடங்கள் கட்டப்படுகிறது.

6 மாதங்களில் இந்த தங்குமிடங்கள் கட்டப்படும். இதில் தங்குவதற்காக ஜார்ஜ் டவுன், கோடம்பாக்கம், கோயம்பேடு, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் வீடற்றவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தங்குமிடங்களில் அவர்களுக்கு இலவச சேவைகள் அறிவிக்கப்படும்.

Tags:    

Similar News