உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் 33 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு

Published On 2023-05-25 08:42 GMT   |   Update On 2023-05-25 08:42 GMT
  • கடந்த சில ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • உயர் ரத்த அழுத்தத்துடனேயே ஒருவர் இருந்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

சென்னை:

பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள் இதற்கு பிரதான காரணமாக அறியப்பட்டாலும், சர்க்கரை நோய், மன அழுத்தம் உள்ளிட்ட இணை நோய்களும் உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை 100-ல் 33 பேருக்கு அத்தகைய பாதிப்பு உள்ளது.அதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் பாதிப்புக்குள்ளானவர்களில் 32 சதவீதம் பேர் மட்டுமே தங்களுக்கு உயர் ரத்த அழுத்த நோய் உ உள்ளதை அறிந்து வைத்துள்ளனர். மற்றவர்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. இதனால், அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளையோ, சிகிச்சைகளையோ எடுத்துக் கொள்வதில்லை.

உயர் ரத்த அழுத்தத்துடனேயே ஒருவர் இருந்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில்கொண்டு 30 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுதோறும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். பாதிப்பு கண்டறியப்பட்டால் மருத்துவரின் பரிந்துரைப்படி தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொது சுகாதாரத்துறை சார்பில், உயர் ரத்த அழுத்த பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான வசதிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News