சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற 4 பேர் கைது
- தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம்:
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 310-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசால் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவு வேளையில், தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கையில் பயணம் செய்வதற்கான பைகளுடன் நின்று கொண்டிருந்த 4 இலங்கை தமிழர்களை தங்கச்சிமடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த சசிகுமார் (வயது 28), கோகிலவாணி (44), வேலூர் அகதி முகாமைச் சேர்ந்த சேகர் என்ற ராஜ்மோகன் (39), சிதம்பரம் அகதி முகாமைச் சேர்ந்த நாகராஜ் (68) என்பதும், சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்ல முற்பட்டதும் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து முறையான பாஸ்போர்ட் இன்றி சட்ட விரோதமாக கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்றதாக வழக்குப் பதிவு செய்த தங்கச்சிமடம் போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் அவர்கள் படகில் தப்பிச்செல்ல உதவி செய்தவர்கள் யார், எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்றும் தங்கச்சிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.