உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நட்ட அமைச்சர்கள் இ.பெரியசாமி மற்றும் அர.சக்கரபாணி.

பசுமை தமிழக இயக்கத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 21 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

Published On 2022-09-24 12:38 IST   |   Update On 2022-09-24 12:38:00 IST
  • திண்டுக்கல் மாவட்டத்திற்கு வனத்துறை மூலம் 20 லட்சத்து 84 ஆயிரத்து 875 மரக்கன்றுகள் நடவு செய்யஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • திண்டுக்கல்லில் இத்திட்டத்தை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் பசுமை தமிழகம் இயக்கம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 23.8 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்தும் நோக்கத்துடன் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

10 ஆண்டுகளில் 260 கோடி மரக்கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் பயிர்களோடு வருமான வாய்ப்புகளை அதிகரிக்க மரம் வளர்த்தல், சமூக, பொது மற்றும் தனியார் பங்களிப்போடு வளர்ந்து வரும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் பசுமை தமிழகம் இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் நோக்குடன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வனத்துறை மூலம் 20 லட்சத்து 84 ஆயிரத்து 875 மரக்கன்றுகள் நடவு செய்யஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல், கொடைக்கானல் வனக்கோட்டம் மற்றும் திண்டுக்கல் சமூகவனக்கோட்டம் மூலம் விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு நிலங்கள் மற்றும் தரம் குன்றிய காடுகள் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இ.டி, தேக்கு, மகாகனி, குமில், வேங்கை, ஆலமரம், அரசமரம், பூவரசு, வேம்பு, இலுப்பை, புங்கன், சரக்கொன்றை, புளி, கொடுக்காப்புளி, அத்தி, பலா, கொய்யா, நெல்லி, நாவல் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வனத்துறை மூலம் நடவு செய்து தரப்படுகிறது.

திண்டுக்கல்லில் இத்திட்டத்தை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் விசாகன், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மேயர் இளமதி, மாவட்ட வனஅலுவலர் பிரபு, உதவி வனபாதுகாவலர் இளங்கோ, சிறுமலை வனஅலுவலர் மதிவாணன், மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் நசுருதீன், வனவர் அப்துல்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News