உள்ளூர் செய்திகள்
புதுமாப்பிள்ளை மாயம்

கோவையில் இன்று திருமணம் நடக்க இருந்த புதுமாப்பிள்ளை மாயம்

Published On 2022-06-03 10:59 IST   |   Update On 2022-06-03 10:59:00 IST
திருமணம் பிடிக்காததால் மாயமானாரா? அல்லது வேறு யாராவது அவரை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை:

கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் பிரபு (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு திருமணம் நடத்துவதற்காக பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இன்று காலை திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு வந்தனர். இந்தநிலையில் பழனிவேல் பிரபு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு சென்றுவிட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றார்.

அதன் பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்க வில்லை.

பின்னர் இதுகுறித்து அவரது குடும்பத்தினர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் போலீசார் புதுமாப்பிள்ளை பழனிவேல் பிரபுவை தேடி வருகிறார்கள்.

இந்தநிலையில் பழனிவேல் பிரபு திருமண ஏற்பாடு செய்த பின்னர் அதிருப்தி எதுவும் தெரிவிக்கவில்லை. திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த அவர் சுறுசுறுப்பாக பத்திரிக்கை கொடுத்து வந்துள்ளார்.

மணப்பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும் தெரிகிறது. மாயமான பின்னர் அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

திருமணம் பிடிக்காததால் மாயமானாரா? அல்லது வேறு யாராவது அவரை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மணமகன் மாயமானதால் இன்று ஏற்பாடு செய்த திருமணம் நின்றது. இதனால் மணமகன்-மணமகள் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News