உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வெற்றிலை உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2022-06-01 07:16 GMT   |   Update On 2022-06-01 07:16 GMT
கணியூர் அமராவதி ஆற்றுப்படுகையின் அடையாளமாக வெற்றிலை இருந்தது.

மடத்துக்குளம்:

மடத்துக்குளம் தாலுகா கணியூர் பகுதியில் அமராவதி ஆறு மற்றும் வாய்க்கால் பாசனத்தை அடிப்படையாகக்கொண்டு 30 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டது. இங்கு அறுவடை செய்யப்படும் வெற்றிலைகள் திருச்சி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. தினசரி லாரிகளில் ஏற்றி செல்லும் அளவிற்கு வெற்றிலை உற்பத்தி நடந்தது. ஆனால் இதற்குபின் சாகுபடி மெதுவாக குறையத்தொடங்கி தற்போது முற்றிலும் அழிந்து போனது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வெற்றிலை சாகுபடி செய்ய 5 சென்ட் அளவிலான இடம் இருந்தால் போதும். இது கொடிவகை தாவரமாகும். இந்த தாவரத்தில் பூக்களும், பழங்களும் உற்பத்தி ஆகாது. வெறும் இலைகள் மட்டுமே உற்பத்தி ஆனதால் இது "வெற்றிலை" என அழைக்கப்பட்டது.

சிறிய நாற்றுகளை குறிப்பிட்ட இடைவெளியில் நடவு செய்து அந்த நாற்றுகள் படர்ந்து வளர அகத்திக்கீரை குச்சிகளை நட்டு வைப்போம். அதன்மீது கொடிபடர்ந்து வெற்றிலை உற்பத்தி ஆகும். 6 மாதத்திலிருந்து வெற்றிலை பறிக்கத் தொடங்கலாம். 5 ஆண்டுகள் வரை இந்தக்கொடியில் வெற்றிலை உற்பத்தி ஆகும்.

நிலத்தில் நட்டு வைக்கப்பட்ட கால்களில் கொடிகள் படர்வதால் வெற்றிலை உற்பத்தி செய்யும் இடம் "கொடிக்கால்" எனப்பட்டது. இதில் சர்க்கரைகொடி வெற்றிலை, வட்டகொடி வெற்றிலை, கற்பூரவெற்றிலை என பல வகை உள்ளது. கணியூர் பகுதியில் உற்பத்தியான வெற்றிலைகள் டன் கணக்கில் எடுத்து செல்லப்பட்டன.

கணியூர் அமராவதி ஆற்றுப்படுகையின் அடையாளமாக வெற்றிலை இருந்தது. பலநூறு விவசாயிகள் இதில் ஈடுபட்டிருந்தனர். அப்போதைய காலகட்டத்தில் (30 ஆண்டுகளுக்கு முன்பு) இந்த கொடிகளில் பரவிய நோய்களை தடுக்க அரசு பெரிதாக உதவிக்கரம் நீட்ட வில்லை.

இதனால் சிறுகச்சிறுக இந்த விவசாய பரப்பு குறைய தொடங்கி, தற்போது வெற்றிலை கொடிக்கால்கள் அழிந்துவிட்டன. இதற்கு அரசு புத்துயிர் கொடுத்து மீண்டும் வெற்றிலை உற்பத்தியை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News