உள்ளூர் செய்திகள்
புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் 4 பகுதிகளையும் உதாசீனப்படுத்த மாட்டோம்- கவர்னர் தமிழிசை உறுதி
புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் 4 பகுதிகளையும் உதாசீனப்படுத்த மாட்டோம் என்று கவர்னர் தமிழிசை உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி:
சுதந்திர இந்தியா அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக இமாச்சல பிரதேசம், சிம்லா நகரிலிருந்து பிரதமர் நரேந்திரமோடி, நாடு முழுவதும் 14 மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் காணொலியில் கலந்துரையாடினார்.
புதுவை, காரைக்காலில் உள்ள பயனாளிகள் பிரதமரோடு கலந்துரையாட கம்பன் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. புதுவையில் 600 பயனாளிகள் இதில் பங்கேற்றனர். மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பயனாளிகளை சென்றடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையிலும், விடுபட்டவர்களை இணைக்கும் நோக்கத்துடன் கலந்துரையாடல் நடந்தது.
மாநில அளவில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் துறைகளின் கண்காட்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் வல்லவன் வரவேற்றார். கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, செல்வகணபதி எம்.பி., சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், கென்னடி எம்.எல்.ஏ., தலைமை செயலர் ராஜீவ்வர்மா, அரசு செயலர் ரவிபிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
பெண்கள் முன்னேறினால் வீடு முன்னேறும். நாடு முன்னேறும் என்பதால் உஜ்வாலா என்ற இலவச எரிவாயு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்திலிருந்தே குடும்பத் தலைவரின் பெயரில் தான் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமரின் இலவச எரிவாயு திட்டம் குடும்ப தலைவரின் பெயரில் பதிவு செய்யப்படாமல் குடும்பத் தலைவியின் பெயரில் பதிவு செய்யப்படுகிறது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம், முத்ரா வங்கி கடன் திட்டம் போன்றவை வழங்கப்படும் போது குறிப்பிட்ட சதவீதம் பெண்களுக்கும், அட்டவணை இனத்தவர் பழங்குடியினர் ஆகியோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. அதனால் இந்த திட்டங்கள் பரவலாக எல்லா பிரிவினருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது.
திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாகச் சென்று சேர வேண்டும். நிர்வாகக் குறைபாடு காரணமாகவோ அல்லது நிறுவனத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாகவோ சில பயனாளிகளுக்கு கிடைப்பது தாமதமாகலாம். ஆனால், மறுக்கப்படாது. எந்த திட்டத்தின் பயனும் யாருக்கும் மறுக்கப் படாது என்பதை புதுவை மக்களுக்கு உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்.
புதுவை எல்லா வகையிலும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பிரதமர், பெஸ்ட் புதுவை என்ற தாரக மந்திரத்தைக் கொடுத்திருக்கிறார். நான் தலைமைச் செயலருடன் கூட்டம் நடத்தி பெஸ்ட் புதுவை, வேகமான புதுவையாக, பாஸ்ட் புதுவையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள், ஊக்கத்தொகை உள்ளிட்ட பயன்கள் அனைத்தும் மிக விரைவாக செயல்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
யார்-யாருக்கு திட்டங்கள் எந்த அளவுக்கு சென்று சேர்ந்திருக்கிறது எந்த அளவுக்கு குறைபாடு இருக்கிறது என்பதை அறிந்து குறைபாடுகளைக் களைந்து மக்களுக்கு சென்று சேர்வதற்கான அத்தனை முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. பிரதமர் தலைமை பொறுப்பேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த 8 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் மிக-வும் சவாலான காலம். கொரோனா பெருந்தொற்றை சந்தித்தோம்.
அண்மையில், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மாநாட்டில் உலக தலைவர்கள் எல்லாம் சொன்ன ஒரு செய்தி. மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், 140 கோடி மக்கள் நெருக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்திய திருநாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த நாடு மிக சிரமப்படும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், சரியான நேரத்தில் சரியான மருத்துவ உபகரணங்களை மற்றும் தடுப்பூசி கொடுத்து இந்திய மக்களை மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள பல நாடுகளில் உள்ள மக்களையும் காப்பாற்றிய பிரதமரின் முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது என்பதுதான். அவர்கள் அதனை இந்திய மாடல் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த தடுப்பூசி மாடல் உலகில் மிகப்பெரிய வெற்றியைத் தந்திருக்கிறது. தடுப்பூசி வந்தவுடன் எல்லோரும் பயன் அடைய வேண்டும் என்பதற்காக முதலில் மருத்துவர்கள் பின் மருத்துவத்துறையோடு சம்பந்தப்பட்ட துணை மருத்துவ ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், முதியவர்கள், இணை நோயாளிகள் என்ற படிப்படியாக அது சென்றடைய வேண்டும் என்று மிகத் தெளிவான மாடலை கடைப் பிடித்தார்கள்.
அதுதான் இந்திய தடுப்பூசி மாடல். இது உலக அரங்கில் பாராட்டப்பட வேண்டியது என்று உலக நாடுகளின் தலைவர்கள் குறிப்பிட்டார்கள்.
உலக நாடுகளால் பாராட்டப்பட்டது, ஏழைகளுக்கு உணவளிக்கும் கரீப் கல்யாண் யோஜனா திட்டம். கொரோனா காலத்தில் வளர்ந்த நாடுகள் கூட பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்தித்தது. மக்கள் பசியால் வாடிக்கொண்டிருந்த நேரத்தில் இந்திய நாட்டில் மக்கள் பசியால் வாடவில்லை. அதற்கு இந்தத் திட்டம்தான் காரணம் என உலக பொருளாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா காலத்தில் பொருளாதாரம் சரிந்து விடக்கூடாது என்பதற்காக ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுத்த ஒரு அரசு மத்தியில் இருந்து கொண்டு இருக்கிறது. அதற்காக பாரத பிரதமருக்கு நாம் தெரிந்து நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
புதுவையை பொறுத்தமட்டில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது, உற்றுநோக்கி வருகிறது என்பதை பலமுறை தெரிவித்துள்ளனர். இளைஞர்களுக்காக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளும் உலக அரங்கில் மிகவும் பிரபலமானது. இதை புதுவைக்கு கொடுக்க வேண்டும். புதுவை இளைஞர்கள் பலரும் பயனடையும் விதத்தில் அது திட்டம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் இந்திய அளவில் கைவினை-ஞர்களும் அதிகமாக பயன்பெற வேண்டும். புதுவை கைவினைஞர்களும் அதில் பயன்பெற வேண்டும் என்பதற்கான நிகழ்ச்சியும் புதுவையில்தான் நடத்த வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
புதுவை இன்று இந்திய வரைபடத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரதமர் புதுவைக்கு பல நல்ல திட்டங்களை வழங்க உள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுவைக்கு வந்த போதும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்று ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன்.
காரைக்கால் ஒதுக்கப்படுகிறது என சிலர் கூறுகின்றனர். ஒரு வாரம் முன்புதான் காரைக்காலுக்கு சென்று தலைமைச்செயலருடன் சேர்ந்து கூட்டங்கள் நடத்தி அங்குள்ள திட்டங்கள் பற்றி தெரிந்துகொண்டோம். காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனைக்குத் தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவ நிர்வாக குழுவினருடன் கூட்டம் நடத்தினோம்.
எந்த வகையிலும் எந்த பிராந்தியத்தையும் உதாசீனம் அடையாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுவை பல புதுமைகளை காண உள்ளது. தென்னிந்தியாவிலேயே பெட்ரோல்-டீசல் விலை புதுவையில் மிக குறைவு. புதுவை மக்களுக்காக மத்திய, மாநில அரசுகள் விலையை குறிப்பிட்ட அளவுக்கு குறைந்திருக்கின்றன.
சுற்றியுள்ள மாநிலங்கள் விலை குறைக்க தயங்கி-னாலும் மக்கள் நலன் கருதி பெட்ரோல்-டீசல் விலை புதுவையில் குறைக்கப்பட்டது என்றால் மக்கள் நலன் சார்ந்த மத்திய- மாநில அரசுகளின் சிந்தனையே அதற்கு காரணம்.
ஒரு மருத்துவர் என்ற முறையில் பாரதப் பிரதமருக்கு எப்போதும் நன்றியைத்தெரிவிக்கிறேன்.
பாரதப் பிரதமர் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொடுத்திருக்கிறார்.
மருந்துகளுக்கு பணமில்லாமல் உயிரிழந்தவர்களை பார்த்திருக்கிறேன். ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தைப் பொறுத்தவரை புதுவை மக்கள் தலைநிமிர்ந்து சொல்லலாம்.
இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பது புதுவை மாநிலம் தான். அதற்கான விருதினையும் இந்திய அரசிடமிருந்து பெற்று இருக்கிறோம்.
அதேபோலத்தான் பிரதம மந்திரியின் மலிவு விலை மருந்தகங்கள் திட்டம். மலிவு விலை மருந்தகங்களில் மருந்துகள் 30 முதல் 70 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்கப்படுகிறது. மக்களுக்கான திட்டங்களை பிரதமர் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார்.
உலக அரங்கில் கொரோனாவுக்கு பிறகு பொருளாதாரத்தை மீட்டு எடுத்த சில நாடுகளில் இந்தியா மிகச்சிறந்த இடத்தை பெறுகிறது என்றால் அதற்கு பாரத பிரதமரின் நிர்வாகத் திறமையும் கூட்டாகப் பணியாற்றிய அத்தனை மாநில அரசுகளும்தான் காரணம்.
பாரத பிரதமர் 8 ஆண்டுகள் நிறைவு செய்து 9-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.