உள்ளூர் செய்திகள்
தியாக சுவரை திறக்க பிரதமருக்கு அழைப்பு- அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
புதுவை கடற்கரை சாலையில்தியாக சுவரை திறக்க பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி 100 அடி உயர தேசியக்கொடியுடன் கூடிய தியாக சுவர் 75 நகரங்களில் சக்ரா பவுண்டேஷன் அமைக்க உள்ளது.
புதுவை கடற்கரை காந்தி சிலை எதிரே தியாக சுவருடன், கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நாட்டின் சுதந்திரத்துக்கு போராடிய ஆயிரம் தியாகிகளின் பெயரை தியாக சுவரில் பொறித்து அதில் கியூ ஆர் கோடு அமைக்கப்படும்.
இதன்மூலம் தியாகிகளின் வரலாறை தெரிந்துகொள்ளலாம். முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஜூலை முதல்வாரத்தில் தியாக சுவர், கொடிக்கம்பம் திறப்பு விழா நடக்கிறது. விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு சக்ரா பவுண்டேஷன் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசியக்கொடியை ஏற்றி தியாக சுவரை பிரதமர் திறந்து வைப்பார். நிகழ்ச்சியோடு பாரதியார் 100-வது ஆண்டு, சுபாஷ்சந்திரபோசின் 125-ம் ஆண்டு, வ.உ.சி. 150-வது ஆண்டு விழாக்களையும் இணைந்து கொண்டாட ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.