உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி: 38 நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகளுடன் அதிகாரிகள் குழு ஆலோசனை

Published On 2022-05-29 17:29 IST   |   Update On 2022-05-29 17:29:00 IST
மாமல்லபுரத்தில் அனைத்து நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள், மேலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் வீரர்களுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.

மாமல்லபுரம்:

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந் தேதி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் தொடங்க உள்ளது. 186 நாடுகளில் இருந்து இங்கு வரும் செஸ் வீரர்களை 38 நட்சத்திர அந்தஸ்து விடுதிகளில் தங்க வைக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

வீரர்கள் தங்கும் 38 விடுதிகளில் உணவு வழங்குதல், உபசரித்தல், விருந்தோம்பல் செய்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல், ரூம்களில் அதிவேக இணையதள வசதி இருத்தல் போன்ற ஏற்பாடுகளை கவனிக்க தமிழக அரசு வருவாய்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது.

அந்த குழு நேற்று மாலை மாமல்லபுரத்தில் அனைத்து நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள், மேலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் வீரர்களுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.

ஓட்டல் நிர்வாகிகள் கூறும் போது, ஜி.எஸ்.டி வரிவிலக்கு தேவை, வெளிநாட்டு வீரர்கள் அதிகமாக வீடியோகால் பயன் படுத்துவார்கள். அதற்கு தற்போது இருக்கும் இணைய சேவை ஒத்துழைக்காது. தடையில்லா குடிநீர் தரவேண்டும், கூடுதல் மின்சாரம் தரவேண்டும், வீரர்கள் பாதுகாப்பு காவலர்கள் உணவுக்கான கட்டணமும் தரவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மை செயலர் வினய், சிறப்பு அலுவலர்கள் வீரப்பன், திவாகர், கலெக்டர் ராகுல் நாத், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந் தகன், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News