உள்ளூர் செய்திகள்
மார்க்கெட்டில் மீன்களை கழுவி சுத்தம் செய்யும் ரமணி-ரஷ்யாவில் விஜயலட்சுமி.

மீன்களை சுத்தம் செய்து சம்பாதித்து ரஷ்யாவில் படிக்க வைத்து மகளை டாக்டர் ஆக்கிய பெண்

Published On 2022-05-29 15:46 IST   |   Update On 2022-05-29 15:46:00 IST
மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்து சம்பாதித்து ரஷ்யாவில் படிக்க வைத்து மகளை டாக்டர் ஆக்கிய பெண்
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் வசித்து வருபவர் ரமணி. இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். 24ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி 11 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது ரமணியின் கணவர், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.


கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு உறவினர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் குடும்பத்தை காப்பாற்ற மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீன் கழுவி சுத்தம் செய்து கொடுக்கும் கூலி வேலைக்கு சென்றார். மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குபவர்கள் தரும் மீன்களை உரசி செதில்கள் நீக்கி அதை துண்டாக வெட்டி சுத்தம் செய்து கொடுப்பது இவரது பணியாகும்.

இதற்காக 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மீன் வாங்குபவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார். காலச்சக்கரம் சுழன்ற நிலையில் மூத்த மகன் ரவிச்சந்திரன் ரத்தநாள சுரப்பி குறைபாடு என்ற மருத்துவத்தால் சரிசெய்ய முடியாத நோயினால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக இவர் ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டி இருந்தது.

இதனால் 10-வதுக்கு மேல் படிப்பை தொடர முடியாமல் தற்போது வீட்டிலேயே இருக்கிறார். இவருக்கு மருந்து மாத்திரைகளுக்கு மாதத்தில் பல ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையில் நன்கு படித்து வந்த ஒரே மகளான விஜெயலட்சுமி 12-ம் வகுப்பு படித்துவிட்டு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் சேர்ந்தார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது மகளின் ஆசையை நிறைவேற்ற தனது சொந்த வீடு மற்றும் நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்தார்.

தற்போது ரஷ்யாவில் படித்து முடித்து மருத்துவராய் திரும்பியுள்ள மகள் விஜயலட்சுமி இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற வேண்டிய அங்கீகார தேர்வு எழுத வேண்டியது உள்ளதால் அதற்காக பயின்று வருகிறார். இன்னமும் நாளொன்றுக்கு 8 மணி நேரம் மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்யும் பணியில் ரமணி ஈடுபட்டு வருகிறார்.

கூட்டுக்குள் இருக்கும் குஞ்சுகளுக்கு எங்கெங்கோ பறந்து திரிந்து உணவை எடுத்து வந்து ஊட்டி வளர்க்கும் தாய்ப் பறவை போல, சொத்துக்களை இழந்தாலும், தன் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய கல்வி செல்வத்தை முழுமையாக கொடுத்த திருப்தி தாய் ரமணியின் கண்களில் தெரிகிறது. ரத்த நாள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு அரசு சார்பில் மருத்துவ உதவி வழங்கினால் அதுவே தனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்று கண்களில் ஈரம் கசிய ரமணி தெரிவிக்கின்றார்.

Tags:    

Similar News