உள்ளூர் செய்திகள்
புதுமண்டபத்தில் கடைகள் அகற்றும் பணி தொடக்கம்.

புதுமண்டபத்தில் கடைகள் அகற்றும் பணி தொடக்கம்

Published On 2022-05-28 08:04 GMT   |   Update On 2022-05-28 08:04 GMT
வசந்த உற்சவம் தொடங்க வசதியாக புதுமண்டபத்தில் கடைகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது.
மதுரை

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 2018-ம் ஆண்டு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அங்கு உள்ள கடைகள் மற்றும் வீரவசந்தராயர் மண்டபம் ஆகியவை தீயில் கருகி சேதம் அடைந்தன.

மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள புது மண்டபத்திலும் அரிய சிற்பங்கள், கல் தூண்கள் உள்ளன. அங்கு உள்ள கடைகளை, குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றுவது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. 

அங்கு கடந்த ஆண்டு கட்டுமான பணிகள் முடிவடைந்தன. புதுமண்டபத்தில் உள்ள 300 கடைகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து புது மண்டபத்தில் இருந்த சுமார் 260-க்கும் மேற்பட்ட கடைகள் குன்னத்தூர் சத்திரத்துக்கு இடம்பெயர்ந்தன. எஞ்சி இருந்த 38 கடைகள் இடம் மாறவில்லை. அந்தந்த கடைகளுக்கு கோவில் நிர்வாகம் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற ஜூன் மாதம் 3-ம்தேதி வசந்த உற்சவம் நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதற்காக புது மண்டபத்தை சுற்றி உள்ள பகுதியில் தண்ணீர் நிரப்புவதற்காக படிக்கட்டுகளை உடைக்கும் வேலை நடந்து வருகிறது. அதற்கு ஏதுவாக புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் கோவில் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மும்முரம் காட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News