உள்ளூர் செய்திகள்
மனைவி தொடர்ந்த வழக்கில் கணவருக்கு 18 மாதம் ஜெயில்
ஜீவனாம்சம் கேட்டு மனைவி தொடர்ந்த வழக்கில் அருப்புக்கோட்டை கோர்ட்டு கணவருக்கு 18 மாதம் ஜெயில் என்று தீர்ப்பளித்துள்ளது.
பாலையம்பட்டி
அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் பேரையூர் தாலுகா தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த அபுதாஹீர் (வயது 44) என்பவருக்கு எதிராக அவருடைய மனைவி அருப்புக்கோட்டை நல்லூர் காட்டுபாவா தெற்குத்தெருவைச் சேர்ந்த பரிதாபாத்தியமா (37) என்பவர் தொடுத்த ஜீவனாம்சம் வழக்கில் நீதிபதி முத்துஇசக்கி அபுதாஹீருக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
அவர் அளித்துள்ள தீர்ப்பில், அபுதாஹீர் அவரது மனைவி பரிதாபாத்தியமாவிற்கு மாதம் ரூ.20 ஆயிரம் பராமரிப்பு செலவிற்கு தரவேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டும் அபுதாஹீர் 54 மாதங்களாக பணம் செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதனால் அபுதாஹீர் 54 மாத பணத்தை மொத்தமாக ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்தை உடனடியாக செலுத்த வேண்டும். அல்லது 18 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து அபுதாஹீர் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.