உள்ளூர் செய்திகள்
தக்காளி

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தது

Published On 2022-05-25 07:01 GMT   |   Update On 2022-05-25 07:01 GMT
கோயம்பேடு சந்தைக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்து பாதியாக குறைய தொடங்கியதால் அதன் விலையும் படிப்படியாக அதிகரித்தது.

போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி தினசரி விற்பனைக்கு வருகிறது.

பரவலாக பெய்த தொடர் மழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்குள்ள வியாபாரிகளும் கோயம்பேடு வியாபாரிகள் கொள்முதல் செய்து வரும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலேயே அதிகளவில் தக்காளியை கொள்முதல் செய்தனர். இதன் காரணமாக திடீரென தக்காளியின் தேவை 2 மடங்காக அதிகரித்தது.

கோயம்பேடு சந்தைக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்து பாதியாக குறைய தொடங்கியதால் அதன் விலையும் படிப்படியாக அதிகரித்தது. கடந்த மாத தொடக்கத்தில் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்கப்பட்ட நிலையில் உச்சபட்சமாக 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.120- யை கடந்து விற்கப்பட்டது.

இந்தநிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ60-க்கு விற்கப்படுகிறது. தக்காளியின் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 39லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் பரவலாக பெய்த மழையால் வரத்து குறைந்து தக்காளி விலை அதிகரித்தது.

தற்போது மழை குறைந்துள்ளதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி விலை குறையத் தொடங்கி இருக்கிறது. வரும் நாட்களில் தக்காளியின் வரத்து அதிகரித்து விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு பெட்டி தக்காளி (14கிலோ) ரூ1100-க்கு விற்ற நிலையில் இன்று விலை குறைந்து ரூ800-க்கு விற்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News