உள்ளூர் செய்திகள்
கைது

ஊத்துக்கோட்டையில் வங்கியில் பணம் எடுத்து வருபவர்களை குறி வைத்து கொள்ளையடித்த சென்னை வாலிபர் கைது

Published On 2022-05-25 06:35 GMT   |   Update On 2022-05-25 06:35 GMT
ஊத்துக்கோட்டையில் வங்கியில் பணம் எடுத்து வருபவர்களை குறி வைத்து கொள்ளையடித்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

ஆந்திர மாநிலம் சத்தியவேடு, வரதயபாளையம், புத்தூர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள வங்கிகளில் பணம் எடுத்து வருபவர்களின் கவனத்தை திசைதிருப்பி ரூபாய் நோட்டுகளை கீழே வீசி மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.

இந்த கும்பலை பிடிக்க திருப்பதி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பரமேஸ்வர ரெட்டி உத்தரவின்பேரில் புத்தூர் துணை போலீஸ் கண்காணிப்பாளர் யஸ்வந்த் மேற்பார்வையில் சத்தியவேடு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ரெட்டி தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சத்தியவேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் சென்னை ராஜமங்கலம், இந்திராநகரை சேர்ந்த விமல் (28) என்பதும் வங்கியில் பணம் எடுத்து வருபவர்களை நோட்டமிட்டு நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து விமலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 2.96 லட்சம் ரொக்கம், 5 பவுன்நகை பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் மற்றும் சத்தியவேடு, வரதயபாளையம், புத்தூர் ஆகிய பகுதிகளிலும் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.

கைதான விமலை போலீசார் புத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பதி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News