உள்ளூர் செய்திகள்
கொள்ளையன் குணா என்கிற குணசேகரன்

50 முறை சிறைக்கு சென்றும் திருந்தாத கொள்ளையன்

Published On 2022-05-24 10:42 GMT   |   Update On 2022-05-24 10:42 GMT
10 வயதில் திருட தொடங்கி 52 வயதிலும் தொடர்கிறது
 கோவை 
மாநகரில், மக்கள் அதிகம் கூடும் கடைவீதிகள் மற்றும் டவுன் பஸ்களில் அடிக்கடி ஜேப்படி நடந்துவருவதாக புகார் எழுந்தது. 
 
இதுபற்றி, கண்காணித்து, கொள்ளையர்களை மடக்கிபிடிக்க, மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. 
இதில் ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் மணிகண்டன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, நாகராஜ், ஏட்டுகள் கார்த்திக், பூபதி, உமா, சுரேஷ் ஆகியோர் இடம்பெற்றனர்.
 இவர்கள், ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி வீதியில் ரோந்து வந்தனர்.
அப்போது, ரோட்டோரம் நிறுத்தியிருந்த ஜனகரத்தினம் என்பவரது காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த 2 லேப்-டாப்களை ஒருவர் திருடியதை கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். 
 
விசாரணையில் அவரது குணா என்கிற குணசேகரன் (வயது 52) என்பதும், கோவை சுக்கரவார் பேட்டை மில் ரோட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 2 லேப்-டாப் மற்றும் ரூ.1,500 பிக்பாக்கெட் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
 பின்னர், குணசேகரன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் கூறியதாவது:-
எங்கள் குடும்பத்தில் சரியான முறையில் வழிகாட்ட எனக்கு யாரும் இல்லை. சிறு வயதில் இருந்தே படிப்பு  வரவில்லை. அதனால் எனக்கு 10 வயது இருக்கும்போதே திருட்டு வேலையில் இறங்கிவிட்டேன்.  
என்னால் முடிந்த அளவுக்கு சிறு சிறு பொருட்களை திருடி, விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்தேன். வளர, வளர திருட்டுத்தொழிலில் நல்ல அனுபவம் கிடைத்தது.
 
இதனால், பெரிய அளவில் திருட ஆரம்பித்தேன். கடைவீதிகளில் கூட்ட நெரிசலில் மக்கள் செல்லும்போது பணம், செல்போன், தங்கநகை என கண்ணில் படுவதை எளிதாக திருடிவிடுவேன். பூட்டிக்கிடக்கும் வீட்டை உடைத்தும் நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து வந்தேன். 
இதுவரை 50 முறை சிறை சென்றுள்ளேன் ஜாமீன் எடுக்கவும்வேண்டும் என்பதால், மீண்டும் திருட்டு வேலையில் ஈடுபடுவேன்.
 
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததால், போலீசார் என்னை 4 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர். அதில் இருந்தும் வெளியே வந்துவிட்டேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து விடுதலையானேன்,  தற்போது குடிபோதையில்  சாலையோரம் கிடப்பவர்களிடம் பணம், செல்போன் திருடுவது,  சிறிய சிறிய திருட்டிலும் ஈடுபட்டு வந்தேன்.  
   மீண்டும் போலீசில் சிக்கிக் கொண்டேன். 
இவ்வாறு வாக்குமூலம் அளித்தார்.இதையடுத்து போலீசார் குணசேகரனை கைது செய்து  கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News