உள்ளூர் செய்திகள்
சமையல் தொழிலாளி முருகன்

களக்காடு அருகே கொலை செய்யப்பட்ட சமையல் தொழிலாளி உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

Published On 2022-05-24 09:45 GMT   |   Update On 2022-05-24 09:45 GMT
களக்காடு அருகே கொலை செய்யப்பட்ட சமையல் தொழிலாளி முருகனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
களக்காடு:

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், யாதவர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 43). சமையல் தொழிலாளி.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் இவரது நண்பரான அதே ஊரை சேர்ந்த முத்தையா என்ற சுரேஷ் சிங்கிகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக முருகன் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டார்.

தேர்தலில் முத்தையா என்ற சுரேஷ் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவரானார். இதனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. பிரமுகர் வானமாமலை என்ற சுரேசுக்கு, முருகன் மீது விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து வானமாமலை என்ற சுரேஷ், முருகனுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 22-ந்தேதி காலை 8 மணியளவில் வயலுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்ற முருகனை, வானமாலை என்ற சுரேஷ் மற்றும் கூலிப்படையினர் 4 பேர் அரிவாள்களால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்தனர்.

இதுபற்றி அவரது மனைவி செல்வி (40) புகாரின் பேரில் களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள வானமாமலை என்ற சுரேஷ் மற்றும் கூலிப்படையினரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், முருகனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முருகனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் சிங்கிகுளம் பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது.
Tags:    

Similar News