உள்ளூர் செய்திகள்
கொள்ளை நடந்த அடகு கடை

காட்பாடி அருகே அடகு கடை சுவரில் துளைபோட்டு ரூ‌.70 லட்சம் நகை கொள்ளை

Published On 2022-05-24 10:57 IST   |   Update On 2022-05-24 10:57:00 IST
காட்பாடி அருகே அடகு கடை சுவரில் துளைபோட்டு ரூ‌.70 லட்சம் நகை கொள்ளையடிக்கபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடியை சேர்ந்தவர் பாண்டு தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவருடைய மகன் அனில்குமார் (வயது 24) சேர்க்காடு கூட்ரோட்டில் சித்தூர் செல்லும் சாலையில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

இந்த கடையை ஒட்டி ஜூஸ் கடை, ஏ.டி‌எம்‌ உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு பின்புறம் காலி இடம் உள்ளது.

நேற்றிரவு அனில்குமார் வழக்கம்போல கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். நள்ளிரவில் மர்ம நபர்கள் அடகு கடையின் பின்னால் இருந்து சுவற்றை துளையிட முயற்சி செய்தனர்.

அடகு கடையின் சுவர் கான்கிரீட் கொண்டு கட்டபட்டிருந்ததால் சுவற்றை உடைக்க முடியவில்லை.

இதனையடுத்து அடகு கடையின் பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையின் சுவரை துளையிட்டு அந்த கடைக்குள் சென்றனர். பின்னர் ஜூஸ் கடைக்குள் இருந்து அடகு கடையின் பக்கவாட்டு சுவற்றில் துளையிட்டு உள்ளே நுழைந்தனர்.

அங்கிருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த சுமார் 90 பவுன் தங்க நகை, 30 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ரூ.35 லட்சம் மதிப்பிலான நகை என மொத்தம் ரூ.70 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தனர்.

அடகு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து அதில் பதிவு செய்யக்கூடிய டிஸ்க் உள்ளிட்ட பொருட்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.

இன்று காலையில் கடைக்கு வந்த அனில்குமார் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

இதுகுறித்து திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிக்கப்பட்டது.

கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் இரும்பு கம்பி மற்றும் அறம் போன்றவற்றை பயன்படுத்தி லாக்கரை உடைத்துள்ளனர்.

அவர்கள் தங்களை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கடையில் இருந்த கேமராவை எடுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேமராவை உடைத்து எடுத்துச் சென்றுள்ளதால் அடையாளம் தெரிந்தவர்கள் யாராவது கடைக்குள் புகுந்து இருக்கலாம். அவர்கள் தங்களை எளிதில் அடையாளம் தெரிந்துவிடும் என்பதால் கேமராவை எடுத்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடகு கடையில் சுவற்றில் துளையிட்டு நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News