உள்ளூர் செய்திகள்
வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.

மானாமதுரை நகரசபை கூட்டத்தில் சொத்துவரி உயர்வை அமல்படுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2022-05-21 11:55 GMT   |   Update On 2022-05-21 11:55 GMT
மானாமதுரை நகரசபை கூட்டத்தில் சொத்துவரி உயர்வை அமல்படுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்மன்ற அவசரக் கூட்டம்   தலைவர்மாரியப்பன் கென்னடி தலைமையில்  நடந்தது. 

துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தீவிரவாத எதிர்ப்பு நாள் உறுதிமொழி வாசிக்கப்பட்டு கூட்டத்தில் பங்கேற்றவர்கள்  உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
 
அதன் பின்னர் நகராட்சி தலைமை எழுத்தர் கணேசன், மானாமதுரை நகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி, காலிமனை இடத்திற்கான வரி உயர்வை அமல்படுத்துவதற்கான தீர்மானத்தை வாசித்தார். அப்போது பேசிய அ.தி.மு.க. 15-வது வார்டு உறுப்பினர் தெய்வேந்திரன், கொரோனா  தொற்று  பரவல்   காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டு பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்து மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் சொத்துவரி, காலிமனை  வரி உயர்வு  பொதுமக்களை மேலும்  பாதிக்கும். அதனால் இந்த   வரி உயர்வை அமல்படுத்துவதற்கான தீர்மானத்துக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து   உறுப்பினர்கள்   வெளிநடப்பு செய்கிறோம் என்றார். 

அதன்பின் உறுப்பினர் தெய்வேந்திரன் தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கங்கா, இந்திரா, அமுதா ஆகியோர்  வெளியேறினர்.

அதைத்தொடர்ந்து 10-வது வார்டு பா.ஜ.க. உறுப்பினர் முனியசாமியும் சொத்துவரி, காலிமனை வரி உயர்வவை அமல்படுத்துவதற்கான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News