உள்ளூர் செய்திகள்
ரங்கசாமியிடம் எதிர் கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. வினர் மனு அளித்த காட்சி.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு- திமுக கோரிக்கை

Published On 2022-05-21 10:04 GMT   |   Update On 2022-05-21 10:04 GMT
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க ரங்கசாமியிடம் தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி:

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கக்கோரி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தி.மு.க அமைப்பாளர் சிவா தலைமையில் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் இன்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் சாதி வெறியின் காரணமாக ஏற்றத்தாழ்வுகள் இருந்து வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950  பிரிவு 15-ன் படி சாதி, மதம், இனம், பாலினம் குடிவழி, பிறப்பிடம் வாழ்வியல் அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.  இதை கதைக்களமாக கொண்டு உதயநிதி  ஸ்டாலின் எம்.எல்.ஏ. நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகியுள்ளது. 

அனைவரும் சமம் என்பதை வளரும் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இத்திரைப்படம் உள்ளது. மேலும் பிரிவினைகளில் புதைந்தவர்களை மீட்டு சமூக நீதியை வென்று சமுத்துவ சமுதாயத்தை உருவாக்க ஊக்கப்படுத்தவும் செய்யும் இப்படத்திற்கு கேளிக்கை வரியை ரத்து செய்து படக்குழுவினரை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த  மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

நிகழ்ச்சின் போது அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், தொகுதி பொறுப்பாளர்கள் கோபால், வடிவேல், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், சமூக அர்வலர்கள் காயத்ரி, வக்கீல் பரிமளம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News