உள்ளூர் செய்திகள்
மின்சார ரெயில்

கடற்கரை-செங்கல்பட்டு இடையே குளிர்சாதன மின்சார ரெயில் இயக்க அரசு பரிசீலனை

Update: 2022-05-19 05:28 GMT
கடற்கரை-செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதி மின்சார ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு தெற்கு ரெயில்வேக்கு கடிதம் மூலம் தெரிவித்து உள்ளது.
சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் தற்போது அதிக களவு அதனை பயன்படுத்தி வருகிறார்கள்.

புறநகர் மின்சார ரெயில்களிலும், பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க ரெயில்வே வாரியம் முன்வந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதியுடன் மின்சார ரெயில் தேவை என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கடற்கரை-செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதி மின்சார ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு தெற்கு ரெயில்வேக்கு கடிதம் மூலம் தெரிவித்து உள்ளது.

இந்த மார்க்கத்தில் அதிக அளவு பயணிகள் மின்சார ரெயிலை பயன்படுத்துகிறார்கள். அதிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்லக்கூடியவர்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் இவ்வேளையில் குளிர்சாதன மின்சார ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்ப்பதாக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகள் இதற்கு தேவைப்படுவதால் அதனை தயாரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான செயல்திட்டம், இயக்கம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரெயில்வே அதிகாரிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மாநில அரசின் தேவை குறித்து ரெயில்வே வாரியத்துக்கு தெற்கு ரெயில்வே விரைவில் கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளது. ஏ.சி. மின்சார ரெயில் தேவையின் அவசியத்தையும், அதற்கான செலவு மற்றும் திட்ட மதிப்பீட்டை ஆய்வு செய்யவும் இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கவும் வலியுறுத்தப்படுகிறது.

இது குறித்து முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி குகநாதன் கூறுகையில்,

கடற்கரை-செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரெயில் இயக்க வேண்டும் என்று மாநில அரசு கோரியுள்ளது. அதன் அடிப்படையில் இதற்கான அனுமதி பெற ரெயில்வே வாரியத்துக்கு கடிதம் எழுதப்பட உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இந்த பணி தொடங்கும் என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக ஏ.சி. மின்சார ரெயில் தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏ.சி. மின்சார ரெயில் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது. மும்பையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புறநகர் மின்சார வழித்தடத்தில் ஏ.சி. ரெயில் பெட்டி பயன்படுத்தப்படுகிறது.

மும்பையை தொடர்ந்து சென்னையிலும் ஏ.சி. மின்சார ரெயில் சேவை வெற்றிகரமாக அமையும். காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் முதல் கட்டமாக இயக்கினால் பயன் உள்ளதாக இருக்கும் என்று பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News