உள்ளூர் செய்திகள்
தஞ்சை சின்ன அரிசிகாரத்தெரு தண்டாயுதபாணி கோவிலில் முத்துப்பல்லக்கு தயார் செய்யும் பணி நடைபெறுகிறது.

முத்துப்பல்லக்கு வீதி உலா

Published On 2022-05-18 10:33 GMT   |   Update On 2022-05-18 10:33 GMT
தஞ்சையில் இன்று முத்துப்பல்லக்கு வீதி உலா விடிய விடிய நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:

தஞ்சையில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான முத்து பல்லக்கு திருவிழா இன்று இரவு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடைபெற உள்ளது. 

இந்த விழாவையொட்டி தஞ்சையில் உள்ள கோவி ல்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகியோர் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 வீதிகளிலும் உலா வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.
 
தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து விநாயகர், முருகன், தஞ்சை மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர், முருகப்பெருமான், குறிச்சி தெருவில் உள்ள முருகன், மேலஅலங்கம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள முருகர் உள்ளிட்ட கோவில்களில் இருந்து சுவாமிகள் முத்துப் பல்லக்கில் எழுந்தருளி  இரவில் தஞ்சையில் உள்ள 4 ராஜ வீதிகளிலும் வீதி உலா வர உள்ளது.

இதேபோல் தெற்கு வீதியில் உள்ள கமலரத்ன விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர்,  கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் விநாயகர் கோவில், மாமாசாகிப்மூலையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் இருந்து  விநாயகரும், முருகப்பெருமானும் எழுந்தருளி வீதி உலா வர உள்ளனர்.

இந்த பல்லக்குகள் எல்லாம் அந்தந்த கோவில்களில் இருந்து புறப்பட்டு  தஞ்சை தெற்கு வீதி, கீழவீதி, மேலவீதி, வடக்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வரும். விடிய விடிய இந்த திருவிழா நடைபெற உள்ளது. நாளை அதிகாலை  மீண்டும் சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்றடையும்.

திருவிழாவை முன்னிட்டு கீழவாசல் சின்ன அரிசிக்கார தெரு தண்டாயுதபாணி கோவிலில் முத்துப் பல்லக்கு தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல் மற்ற கோவில்களிலும் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. கொரோனா பரவல் குறைந்ததால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News