உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்
தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
பெரம்பலூர் :
பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நீலகண்டன்,மாவட்ட பொருளாளர் மணிஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாய மின்இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கிவரும் மின்மாற்றிகள் பழுதடைந்தால் அதனை விதிப்படி 48 மணிநேரத்திற்குள் பழுது நீக்கம் செய்து தடையின்றி மின்விநியோகம் செய்ய வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்துறையில் தளவாட சாமான்கள், மின்மாற்றிகள் மாவட்டம் முழுவதும் கொண்டு செல்ல ஏதுவாக போதுமான வாகனங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு 2022-2023ம் ஆண்டிற்கு 50 ஆயிரம் இலவச மின்இணைப்பு வழங்குவதாக அறிவித்த கோட்டாவில் சாதாரண முன்னுரிமையில் இலவச மின்இணப்பு வழங்கிட இலக்கீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏரி, குளம் மற்றும் நீர் ஆதாரபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அரசியல் பாகுபாடின்றி அகற்ற வேண்டும்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் விவசாய நிலங்களில் சேதம் விளைவிக்கும் காட்டுப்பன்றியை வனத்துறையினரே சுடுவதற்கு அனுமதி அளித்துள்ளதைப் போல பெரம்பலூர் மாவட்டத்திலும், வனத்துறை மூலம் விவசாய நிலங்களில் சேதாரம் விளைவிக்கும் காட்டுப் பன்றிகளைச் சுடுவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
வேப்பந்தட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரம் பதிவு செய்து வருவதைப் பற்றி பதிவு துறை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை விபத்தில் உயிரிழிப்பவரின் குடும்பத்திற்கு குறைந்தபட்ச இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து அறிவித்ததை அரசாணையாக வெளியிட்டு மத்திய அரசு அமல்படுத்திடவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், சுந்தரராஜன், செல்லகருப்பு, ஜெயப்பிரகாஷ், ராஜா, ரகுபதி, துரைராஜ், ரெங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.