உள்ளூர் செய்திகள்
வேதாரண்யம், பிரிவு உபசார விழா

மாணவர்களுக்கு கேக் வெட்டி பிரிவு உபசார விழா நடத்திய ஆசிரியர்கள்

Published On 2022-05-15 09:37 GMT   |   Update On 2022-05-15 09:37 GMT
வேதாரண்யம் தொடக்கப்பள்ளியில் கேக் வெட்டி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழாவை ஆசிரியர்கள் நடத்தினர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வடமழை ரஸ்தா தொடக்கப்பள்ளி 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 96 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

 பள்ளிகளில் வழக்கமாக ஆசிரியர்கள் பணிமாறுதல் பெற்றால் மற்றும் பணி ஓய்வு பெற்றால் பாராட்டு விழா நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 25 மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு செல்கின்றனர். இவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இணைந்து பாராட்டு விழா நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து பள்ளியை விட்டு பிரிந்து செல்லும் மாணவர்களுடன் ஆசிரியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் விருந்தும் வைத்தனர்.

 நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் கருணாநிதி, அமுதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பரிசுகளும் ஆசிரியர்கள் வழங்கி மகிழ்ந்தனர். மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து புகைப்படமும் செல்பியும் எடுத்துக் கொண்டனர். ஐந்து ஆண்டுகளில் பள்ளியில் ஆசிரியர்களுடன் ஒன்றாக இருந்து பழகிய மாணவ- மாணவியர்கள் கண்ணீர் மல்க விடை பெற்றனர்.

 பள்ளி தொடங்கிய 64 ஆண்டுகளில் இப்பள்ளியில் இது போன்ற ஒரு விழா நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News