உள்ளூர் செய்திகள்
சாதனை படைத்த கீழ்வேளூர் அரசு பள்ளி மாணவர்கள்.

அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-05-15 09:36 GMT   |   Update On 2022-05-15 09:36 GMT
நாகை அருகே கீழ்வேளூர் அரசு பள்ளி மாணவர்கள் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாட நூல்களில் உள்ள ஏட்டுக் கல்வியை மட்டும் கற்பிப்பதோடு நிறுத்திவிடாமல், மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அதற்கான ஊக்கமும் ஆக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி மாணவர்களின் தனித் திறமையை கண்டறிந்து கொடுக்கப்பட்ட தொடர் பயிற்சியின் காரணமாக சாதனையாளர்களாக 10 மாணவர்கள் தற்போது உருவாகி உள்ளனர். இப்பள்ளியை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

இப்பள்ளியை சேர்ந்த பிரதீபா, அபிநயஸ்ரீ, ஜாஸ்னி, லோகேஷ், நக்ஷத்திரா, வனிதா, அன்னபூரணி, சரண்யா, கனிஷ்கா, நிஷாலினி ஆகியோர் 2.20 நிமிடங்களில் 360 மாவட்டங்களை சரளமாக கூறுதல், வாய்ப்பாடுகளை தலைகீழாக எழுதுதல், 1330 பொட்டுகளில் திருவள்ளுவரின் படத்தை வரைவது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை மிகக் குறுகிய நேரத்தில் நிகழ்த்தி அசத்தியுள்ளனர்.

இம்மாணவர்களுக்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பள்ளி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இளம் வயதிலேயே 10 அரசு பள்ளி மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாகி இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News