உள்ளூர் செய்திகள்
நாய் இழுத்து வந்த சிசு உடல் மீட்பு
நாய் இழுத்து வந்த சிசு உடலை பொதுமக்கள் மீட்டனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சின்னான்கோன்விடுதி பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்பில் ஐஸ்வர்யா என்பவரின் வீட்டி ன் பின்புறம் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் சிசு உடலை நாய் ஒன்று இழுத்து வந்து கொண்டிருந்தது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நாயை விரட்டியடித்து, கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கிராம நிர்வாக அதிகாரி ஜெயமணி, சிசுவின் உடலை பார்வையிட்டு, ரெகுநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் சுகாதார நிலையங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்த 3 நாட்களே ஆன குழந்தையை நாய் இழுத்துவந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.