உள்ளூர் செய்திகள்
பழுதடைந்த பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் பெயர்ந்து விழுவதால் மாணவர்கள் அச்சம்
பழுதடைந்த பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் பெயர்ந்து விழுவதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ராங்கியம் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50 ஆண்டுகள் பழமையான ஓட்டு கட்டிடம் ஒன்று உள்ளது. கஜா புயலின் தாக்கத்தில் இந்த ஓட்டு கட்டிடம் சேதம் அடைந்தது.
இந்த நிலையில் தற்போது அந்தக் கட்டிடத்தின் ஓடுகள் பெயர்ந்து விழுகின்றன.
இது மாணவர்களின் மீது விழுந்து விடுமோ என்ற அச்சம் குழந்தைகளின் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
புதிய கட்டிடம்
ஆகவே இந்த பழமையான கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய வகுப்பறை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கின்றது. இதனால் திறந்த வெளியில் செல்லும் அவல நிலை நீடிக்கிறது.
இந்த பள்ளிக்கூடத்தில் போதிய வகுப்பறை வசதி இல்லாத காரணத்தினால் புத்தகப் பைகளை சமையலறை கட்டிடத்தில் வைத்து விட்டு வகுப்பறைக்கு செல்லும் நிலையும் இருப்பதாக பள்ளி குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர்.
இது பற்றி சிலர் கூறும்போது,பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.