உள்ளூர் செய்திகள்
பண மோசடி

புதுவையில் 10 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி

Update: 2022-05-13 10:45 GMT
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி புதுவையைச் சேர்ந்த 10 பேரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த நாகையை சேர்ந்தவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை சாரதாம்பாள் நகர் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவர் லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் பாக்கமுடையான் பட்டு பார்வதி திருமண மண்டபம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இவரிடம் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் வாடகை வீட்டில் வசித்த முல்லை நாதன் (வயது 49). என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக ஜெராக்ஸ் எடுத்தும் செல்லும் வாடிக்கையாளராக இருந்து பழக்கமானார்.

இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டு தனக்கு தெரிந்த நபர் ஒருவர் சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருவதாகவும் அவர் தற்போது சென்னை வந்துள்ளார். அவர் வேலைபார்க்கும் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் குணசேகரனிடம் முல்லை நாதன் தெரிவித்தார்.

இதையடுத்து குணசேகரன் தனது ஜெராக்ஸ் கடையின் அருகில் ஸ்கூல் பேக் கடை வைத்திருக்கும் சாதிக் என்பவரிடம் கூறி அவரது மகன் சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல இரண்டரை லட்சம் பணம் வாங்கிக் கொடுத்தார்.

3 மாதத்தில் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறிய முல்லை நாதன் 5 மாதங்கள் கடந்தும் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.

இது குறித்து முல்லை நாதனிடம் குணசேகரன் கேட்ட போது தனி ஆளாக வேலைக்கு அனுப்ப முடியாது. குரூப்பாக தான் அனுப்ப முடியும். எனவே இன்னும் ஆட்கள் இருந்தால் ஏற்பாடு செய்யுமாறு முல்லை நாதன் தெரிவித்தார்.

அதன்படி தனக்கு தெரிந்த மேலும் 9 பேரிடம் பணம் வாங்கி கொடுத்தார்.

மொத்தம் ரூ.14 லட்சம் வங்கி மூலமாகவும் நேரடியாகவும் இந்த பணத்தை முல்லைநாதனிடம் குணசேகரன் அளித்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்ல விசா பெற்றுத்தரவில்லை.

இது பற்றி முல்லை நாதனிடம் குணசேகரன் கேட்ட போது தற்போது கை உடைந்து விட்டதால் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுவதாக முல்லை நாதன் தெரிவித்தார்.

செல்போனில் பல முறை தொடர்பு கொண்டு கேட்ட போது இதே பதிலையே முல்லை நாதன் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த குணசேகரன் சம்மந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்த போது அதுபோல் யாரும் தங்கி சிகிச்சை பெறவில்லை என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

பின்னர் தீர விசாரித்த போது முல்லை நாதன் அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லை வாசல் பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது.

இதை தொடர்ந்து குணசேகரன் திருமுல்லை வாசல் சென்று முல்லைநாதனிடம் பணத்தை கேட்ட போது திருப்பித் தந்துவிடுவதாக உறுதி கூறினார். ஆனால் அதன் பிறகும் முல்லை நாதன் பணத்தை கொடுக்கவில்லை. இதையடுத்து வேலைக்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு குணசேகரனுக்கு நெருக்கடி கொடுத்ததால் அவர் வட்டிக்கு பணம் வாங்கி அதனை கொடுத்துவிட்டார்.

இதற்கிடையே முல்லை நாதனுக்கு ஏற்கனவே குணசேகரன் ரூ.8 லட்சம் கடனாக கொடுத்திருந்தார். அந்த பணத்தையும் முல்லை நாதன் கொடுக்கவில்லை. இடையில் குணசேகரனிடம் வாங்கிய பணத்துக்காக முல்லை நாதன் ரூ.8 லட்சத்துக்கு காசோலை கொடுத்து இருந்தார். ஆனால் அதனை வங்கியில் செலுத்திய போது அந்த வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்ப வந்து விட்டது.

இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த குணசேகரன் இதுபற்றி புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் மோசடி செய்த முல்லை நாதனை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Tags:    

Similar News