உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

மயக்க மருந்து தடவி விவசாயி வீட்டில் பணம்-நகை திருடிய மர்ம நபர்

Published On 2022-05-13 15:40 IST   |   Update On 2022-05-13 15:40:00 IST
மயக்க மருந்து தடவி விவசாயி வீட்டில் பணம்-நகை திருடிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னிமலை:

மயக்க மருந்து தடவி விவசாயி வீட்டில் பணம்-நகை திருடிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
 ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி (58) விவசாயி. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

குமாரசாமி கால் வலி காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். 

அப்போது அவருக்கு தெரிந்தவர்கள் நாட்டு வைத்தியர் ஒருவர் இருக்கிறார். 

அவர் மருந்து கொடுத்தால் எளிதில் குணமாகிவிடும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து குமாரசாமி நாட்டு வைத்தியரை தனது வீட்டுக்கு வரச்சொல்லி உள்ளார். 

அதன்படி சம்பவத்தன்று குமாரசாமியின் வீட்டுக்கு நாட்டு வைத்தியர் என்று கூறிக்கொண்டு ஒரு வாலிபர் வந்தார்.

அவர் குமாரசாமியிடம் உங்கள் கால் வலியை நாட்டு வைத்தியம் மூலம் சரி செய்து விடலாம் என்று நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார். குமாரசாமியும் இதை நம்பினார். 

இந்நிலையில் நாட்டு வைத்தியர், குமாரசாமி மற்றும் அவரது மனைவி, மகன் மீது பவுடர் போன்ற ஒரு மயக்க பொடியை கலந்து அவர்களது மீது தடவினார். 

பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் மயங்கி விட்டனர்.

பின்னர் அந்த நாட்டு வைத்தியர், குமாரசாமி வீட்டில் இருந்த ரூ.48 ஆயிரம் பணம் மற்றும் 4 கிராம் தங்க தோடு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். 

சிறிது நேரம் கழித்து நினைவு வந்தவுடன் குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டு வைத்தியர் இல்லாததை கண்டு சந்தேகம் அடைந்தனர். 

இதையடுத்து அவர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது பணம்-நகை திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது

பின்னர் தன்னை ஏமாற்றி நாட்டு வைத்தியம் பார்ப்பதாக வந்த நபர் வீட்டில் திருடிச் சென்றது குறித்து குமாரசாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நாட்டு வைத்தியர் யார் என்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

Similar News