உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

உணவகங்களில் 10 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

Published On 2022-05-13 15:30 IST   |   Update On 2022-05-13 15:30:00 IST
புதுக்கோட்டையில் உள்ள உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கெட்டுப்போன 10 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை:


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிட தொழிலாளர்களுக்கு அதன் உரிமையாளர் ஒரு ஓட்டலில் பிரியாணி வாங்கி கொடுத்தார். அதனை சாப்பிட்ட 44 பேர் வாந்தி, மயக்கம் அடைந்ததையடுத்து ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் சாப்பிட்ட உணவு கெட்டுப்போயிருந்தது ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துரித உணவு மற்றும் சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து ஓட்டல்களிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் முதல் கட்டமாக நேற்று 35 அசைவ உணவங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அதில் கெட்டுப்போன 10 கிலோ இறைச்சி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த இறைச்சி அனைத்தும் பெரும்பாலும் அழுகிய நிலையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரவீண்குமார் கூறுகையில், கேரளாவில் ஷவர்மா உணவு சாப்பிட்ட மாணவி ஒருவர் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து ஓட்டல்களிலும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அந்த அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் சோதனை தொடர்கிறது.

கடந்த வாரம் கூட அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. 

புதுக்கோட்டையில் 35 கடைகளில் நடத்திய சோதனையில், கிட்டத்தட்ட 10 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து அந்த கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்துள்ளோம்.

பெரும்பாலான கடைகளில் இறைச்சியை சேமிப்பதில் சரியான முறைகளை கையாளுவதில்லை. மீதமான இறைச்சியை பிரீசரில் வைப்பதற்கு பதிலாக சாதாரண குளிர்சாதன பெட்டிகளில் வைத்துவிட்டு செல்கிறார்கள். 

அந்த இறைச்சியை மறுநாள் பயன்படுத்தும்போது, அது கெட்டுப்போனதாக மாறி அதனை சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றாத உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் பின்பற்றாமல் அஜாக்கிரதையாக செயல்பட்டால் கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.

Similar News