உள்ளூர் செய்திகள்
ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஸ்ரீதர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்- கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

Published On 2022-05-12 10:44 GMT   |   Update On 2022-05-12 11:01 GMT
வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் விவசாயி நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 7.5 குதிரைத்திறன் கொண்ட சோலார் மின் மோட்டார் அமைப்பினை ஆய்வு செய்து, அதன் பயன்பாடு குறித்து விவசாயியிடம் கேட்டறியப்பட்டது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளுக்கு மடிநோய், செயற்கை கருவுற்றல் மற்றும் குடற்புழு நீக்கம் முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் கிராம ஊராட்சி அளவிலான சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீதான நடவடிக்கைகளை தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மேலும் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் விவசாயி நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 7.5 குதிரைத்திறன் கொண்ட சோலார் மின் மோட்டார் அமைப்பினை ஆய்வு செய்து, அதன் பயன்பாடு குறித்து விவசாயியிடம் கேட்டறியப்பட்டது.

தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ஆலத்தூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடுதல் திட்டத்தின்கீழ் மரக்கன்றுகளை நட்டார். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அரசு நிர்ணயித்துள்ள அளவீட்டில் வீடுகளை குறித்த காலத்திற்குள் முடித்திட பயனாளிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் ரூ.13.38 லட்சம் மதிப்பீட்டில் ஆலத்தூர் புத்தேரிக்குளம் புனரமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குளத்திற்கான நீர் வரத்து, வெளியேற்றம் மற்றும் புனரமைப்புப் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ஆலத்தூர் கிராமத்தில் தரிசு நிலங்களை சாகுபடிக்குக் கொண்டுவரும் நோக்கில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 35 ஏக்கர் தரிசு நிலத் தொகுப்பில் முள்வேலிச் செடிகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு செய்து, ஆழ்த்துறை கிணறு அமைக்கப்பட உள்ள பகுதியையும் பார்வையிட்டு, தரிசு நில சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்திட வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, வேளாண் இணை இயக்குநர் வேல்விழி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மனோகரன், வேளாண் துணை இயக்குநர் சுந்தரம், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் அலமேலு ஆறுமுகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) நடராஜன், வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி, ஆலத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் மல்லிகா லோகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News