உள்ளூர் செய்திகள்
file photo

மண் வளத்தை பாதுகாக்க கோடை உழவு அவசியம்

Published On 2022-05-12 15:44 IST   |   Update On 2022-05-12 15:44:00 IST
மண் வளத்தை பாதுகாக்க கோடை உழவு அவசியம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட செய்தி  குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
அரியலூர் மாவட்டம், முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. விவசாயிகள் இம்மழையினை பயன்படுத்தி கோடை உழவு செய்தால் மண்ணின் மேற்பரப்பில் உள்ள கடினப்பகுதி உடைக்கப்பட்டு, மண்ணின் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. 

மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர ஏதுவாகிறது. கோடை உழவு செய்வதினால், மண்ணானது ஈரமும் மற்றும் காய்சலுமாக இருப்பதினால் மண்ணின் அமைப்பு மேம்படுத்தப்படுகிறது.

களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு சிதைவுற்று மண்ணிற்கு பாதிப்பில்லாமல் பாதுகாக்கப்படுகிறது.

கோடை மழை, வளி மண்டலத்திலுள்ள வளிமண்டல நைட்ரேட்டுடன் இணைந்து பெறப்படுவதினால் மண்ணின் வளம் மேம்படுத்தப்படுகிறது.

பயிருக்கு தீங்கு செய்யக் கூடிய கூட்டுப் புழுக்கள் வெளிக்கொணரப்படும். அவற்றை கொக்கு, நாரை போன்ற பறவைகள் உண்டு அழிக்கின்றன. இத்தகைய பயன்தரக்கூடிய கோடை உழவினை அனைத்து விவசாயிகளும் தற்போது பெய்துள்ள மழையினை பயன்படுத்தி உழவு செய்யலாம்.

இதற்காக வேளாண் பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகையில் உழவு செய்திட சம்பந்தப்பட்ட வேளாண் பொறியியல் துறையின் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித:துள்ளார்.

Similar News