உள்ளூர் செய்திகள்
கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்யவேண்டும்
பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்.
சென்னிமலை:
பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்.
சென்னிமலையில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் நடந்தது. இதில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாசலம், செயலாளர் செங்கோட்டையன் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி, இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் பொடாரன் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்து பேசினார்.
இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழலை பாதிக்கும் எல்.பி.பி வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். எதிர்க்கட்சியான அ.தி.மு.க., எதிர்க்கட்சித் தலைவர் இத்திட்டத்தை ரத்து செய்யுமாறு அரசை வலியுறுத்த வேண்டும்.
65 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள பாசன வாய்க்கால்களை பாதுகாக்க நமக்கு நாமே திட்டத்தில் ரூபாய் ஒரு கோடி பாசன பாதுகாப்பு சபை சார்பில் அரசுக்குச் செலுத்தி ரூ. 3 கோடியில் தூர் வாரும் பணிகளை செய்ய நடவடிக்கை தொடங்க வேண்டும்.
வாய்க்கால்களில் கரைகளில் பனை விதைகளை நட்டு கரையை பலப்படுத்த வேண்டும். நீர் மேலாண்மைக்கான நிரந்தரமான பணியா–ளர்களை நியமிக்க வேண்டும்.
மேற்கு மண்டலத்தை பாதுகாக்க பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இந்த கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்வதற்கு செய்ய வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தினர்